தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; திமுக அரசே முழு பொறுப்பு - டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது?
மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தொடக்ககாலத்தில் மாணவத் தலைவராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவராக உயர்ந்தது வரை சுதாகர் ரெட்டி தனது வாழ்வைப் பாட்டாளிகள், உழவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தலைவர் கலைஞர் நினைவேந்தல் என அவர் தமிழ்நாடு வந்தபோதெல்லாம் அவரது அன்பையும் தெளிவான பார்வையையும் அருகில் இருந்து கண்டுணர்ந்திருக்கிறேன். நீதி மற்றும் மாண்புக்கான போராட்டத்துக்கு அவரது வாழ்வு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 55 பவுன் நகை- ரூ.5 லட்சம் பணம் கொள்ளை
வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்: இளவேனில் வாலறிவனுக்கு அண்ணாமலை வாழ்த்து
ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "2025 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் அற்புதமான சாதனைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமைப்படுத்துகின்றன. இளவேனில் சாதனைகள், எதிர்கால சாம்பியன்களை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தியாவின் தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள்! இந்தியாவின் விண்வெளிப் பயணம் நமது உறுதிப்பாடு, புதுமை மற்றும் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் நமது விஞ்ஞானிகளின் திறமையைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சதுர்த்தி விழா.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தர்மஸ்தாலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக வழக்கு: புகார் அளித்தவர் கைது
கர்நாடகாவின் தர்மஸ்தாலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஏராளமான பெண்களின் சடலங்களை புதைத்ததாக முன்னாள் பணியாளர் புகார் அளித்திருந்தார். அவர் கூறிய இடங்களில் தடயங்கள் இல்லாததால் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்துள்ளது.
ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி
மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெல்லையில் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும்; எங்களை எதுவும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது; 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது; தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான்... திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது.
அதுபோல பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது; அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திமுகவிற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து திமுக வெற்றி பெறும்... இதே தொகுதியில் (நெல்லை) நாங்கள் வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம்: செப். 1 முதல் தொடக்கம்
இந்தநிலையில், ஏற்கனவே மூன்று கட்ட சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில், தற்போது 4-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.