குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.;
தென்காசி,
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாகவும், அந்த வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பருவமழை முந்தியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவிதுள்ளார்.
இந்த காரணங்களினால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.