வாழைப்பழம் சாப்பிட்டபோது விபரீதம் - மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண்(வயது 5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளார். பழத்தை சாப்பிட்ட சிறுவன் அதனை விழுங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், வாழைப்பழம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியது.
இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சுத்திணறல் ஏற்பட்ட சமயத்தில் துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை கொடுக்கும்போது அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி கொடுக்க வேண்டும் எனவும், மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்தி பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.