போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 5-வது நாளாக நீடிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள், ஊதிய ஒப்பந்த நிலுவை, 12 மாத அகவிலைப்படி நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டமானது 4-வது நாளாக நேற்றும் நீடித்தது. சென்னையில் அயனாவரம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அரை நிர்வாணமாகவும், கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்தும் நூதனப் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறும்போது, "ஓய்வுபெற்றோருக்கான நிலுவைத் தொகை முழுமையாக எப்போது அரசு வழங்கும்? பணியில் உள்ள தொழிலாளர்களின் ஒப்பந்த நிலுவைத்தொகை மற்றும் இதர நிலுவைத் தொகைகள் எப்போது வழங்கப்படும்? 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான அணுகுமுறை என்ன? என்பன போன்றவற்றில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை. அரசு தொழிற்சங்கத்தை அழைத்த பேசி கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்" என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 5-வது நாளாக நீடித்து வருகிறது. காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.