ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து

தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-06-02 19:25 IST

கோப்புப்படம் 

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.

இந்த நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

4*400 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன், 4*100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற அபிநயா நடராஜன், கால் வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் 400 மீட்டர் தடை தாண்டுதலில் பங்கேற்று வெண்கலம் வென்ற வித்யா ராமராஜ் உட்பட, பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்