மேகதாது அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள்: கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை நிலைநாட்டிடும் வகையில் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தராமல் உபரி நீரை மட்டுமே திறந்துவிடுவதை கர்நாடக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்த செயல்பாட்டின் மூலம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் முற்றிலுமாக கர்நாடக அரசால் புறக்கணிக்கப்படுகிறது. உரிய நீரைப் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஓராண்டு கூட உரிய நீரை திறந்துவிடாத அரசு கர்நாடக அரசு. இந்த நிலையில் மைசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில முதல்-மந்திரி மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இத்திட்டத்தால் தமிழக விவசாயிகள் நலனுக்கு தீங்கு ஏற்படாது என்றும் கூறியிருக்கிறார். கர்நாடக மாநில முதல்-மந்திரியின் மேற்படி கூற்று தமிழ்நாட்டை பாலைவனமாக்க வழிவகுக்குமே தவிர, சோலைவனமாக்க வழிவகுக்காது. இதன்மூலம், உபரி நீரையும் தமிழ்நாட்டிற்கு தரக்கூடாது என்ற கர்நாடக அரசின் தீய எண்ணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து 177.25 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டுமென்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 150 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்-மந்திரி கூறி இருக்கிறார். இந்தக் கூடுதல் நீரையும் கர்நாடகத்தில் தேக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற கருத்துகளை கர்நாடக முதல்-மந்திரி கூறி வருகிறார். இந்த ஆண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்ததன் காரணமாக கூடுதல் உபரி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டு இருக்கிறது. ஒருவேளை மழைப் பொழிவு குறைவாக இருந்தால், கர்நாடகத்திற்கே தண்ணீர் இல்லை என்ற பாட்டைத்தான் கர்நாடகம் தெரிவிக்குமே தவிர, தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தராது.
மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டினால், தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் என்பதுதான் யதார்த்தம். இந்தத் திட்டம் கர்நாடகத்திற்கு மட்டும்தான் பயனளிக்குமே தவிர, தமிழ்நாட்டிற்கு பயனளிக்காது. எனவே, மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து தி.மு.க. அரசு வாய் திறக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
இனி வருங்காலங்களில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மேகதாது அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள் கூறுவதை கர்நாடக மாநில முதல்-மந்திரி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.