வேலூர்: மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தமிழ் குமரன் (18 வயது). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் காலை முதல் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு புகார் அளித்தும் சரி செய்யப்படவில்லை.
இதையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிபார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கல்லூரி மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.