துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திருப்பூர் வருகை

கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறையினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.;

Update:2025-10-28 05:41 IST

திருப்பூர்,

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர், திருப்பூர் சந்திராபுரம் ஆகும். அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான திருப்பூருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறையினர் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து பேரூர் தமிழ் கல்லூரியில் நடக்கிற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு சாலை மார்க்கமாக கார் மூலம் மாலை 5 மணிக்கு அவர் திருப்பூர் வருகிறார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

பின்னர் நாளை (புதன்கிழமை) காலை சந்திராபுரத்தில் உள்ள தனது குலதெய்வமான பாலைமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து திருப்பூர் வரும் அவர், ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.

 

Tags:    

மேலும் செய்திகள்