மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் முடிவு?
விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக முற்றுப்புள்ளி வைத்தது.;
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் படுதோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.
அதிமுகவில் ஏற்கனவே 2001, 2006-ம் சட்டமன்ற தேர்தல்களில் திண்டிவனத்தில் வென்ற சி.வி.சண்முகம் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தொடர்ந்து, 2011, 2016 தேர்தல்களில் சி.வி.சண்முகத்தை தொகுதி மாறி விழுப்புரத்தில் போட்டியிட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் தொகுதியில் 10 ஆண்டு காலம் அமைச்சர், எம்.எல்.ஏ.வாக சி.வி.சண்முகம் நீடித்தார்.
இதனையடுத்து 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதன்மூலம் விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இம்முறை தனது சொந்த கிராமமான அவ்வையார் குப்பத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதிக்கு மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் சார்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர்.