இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை - தமிழக அரசு
11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.
பிபிசி செய்தி நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்
2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்டதாக கூறி பிபிசி செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டு பிபிசி நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்கிரஸ் கேள்வி
காங்கிரசின் கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கூறுகையில், “ஐபிஎல் ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? இந்தியாவில் அரங்கங்களே இல்லையா? இதே செயலை வேறு யாராவது செய்திருந்தால் உடனே 'தேச விரோதிகள்' என முத்திரை குத்திவிடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது..” - மதுரை ஐகோர்ட்டில் வக்பு வாரியம் தரப்பு வாதம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டில் இன்று பரபரப்பாக நடந்து வருகிறது.
வறுமையை ஒழிக்க நியாயமாக போராடி வரும் மாநிலங்களை மோடி அரசு தண்டிக்க நினைப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி; அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது - அன்புமணி வலியுறுத்தல்
மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10 சதவீதத்திற்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். .
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டை ஏற்க டெல்லி கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
பண முறைகேடு குறித்து முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலேயே அமலாக்கத்துறையால் விசாரிக்க முடியும் என்றும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு, தனியார் புகார் அடிப்படையிலானது என்றும், முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.