விஜய் ரசிகர்கள் மக்களை மிரட்டி வருகிறார்கள்: கருணாஸ் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று கருணாஸ் கூறினார்.;
சிவகாசி,
சிவகாசி வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் சில நிகழ்ச்சிகளை தான் நடத்தி உள்ளார். அதற்குள் அவரது ரசிகர்கள் மக்களை மிரட்டி வருகிறார்கள். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத நிலையிலும் மாநில வருமானத்தை கொண்டு பல நல்ல திட்டங்களை அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
பா.ஜனதாவுக்கு விஜய் போன்றவர்கள் துணை போய் விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நான் தி.மு.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தேன். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
சாத்தூர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று எனது கட்சியினர் ஆர்வமிகுதியால் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. தனிபெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.