கூட்டணி கதவுகள் திறந்திருந்தும் யாரும் வரவில்லை: விஜய்யின் அடுத்த 'மாஸ்டர் பிளான்'..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அடுத்த 'மாஸ்டர் பிளானை' புதிதாக உருவாக்கியுள்ளார்.;

Update:2026-01-27 07:59 IST

சென்னை,

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 16 முறை சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அடுத்த 2 மாதங்களில் நடைபெறப்போவது, 17-வது சட்டசபை தேர்தல் ஆகும்.

இதுவரை 16 முறை சட்டசபை தேர்தல் நடைபெற்றாலும், விரல் விட்டு எண்ணக்கூடிய சில தேர்தல்களே முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதாவது, 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் காங்கிரஸ் கையில் இருந்த ஆட்சியை தி.மு.க. தட்டிப்பறித்ததால் 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முக்கியத்தும் பெற்றது.

அதேபோல், 1969-ம் ஆண்டு அண்ணா மறைந்த பிறகு, கருணாநிதி முதல்-அமைச்சராக பதவியேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, 1977-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து, தேர்தலை சந்தித்து, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் முக்கியத்துவம் பெறுகிறது.

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தலும், 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல் முறையாக ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2006 சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியாக களம் கண்டதையும் புறம் தள்ளி விட முடியாது.

இதேபோல், இருபெரும் அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலும் முக்கியத்தும் பெறுகிறது. இந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

முதல் முறையாக சட்டசபை தேர்தல்

இதேபோல், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலும் முக்கியத்துவம் பெறப்போகிறது. காரணம், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி, முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

ஆனால், விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் இறந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதும், அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராமல் போனதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

'விசில்' சின்னம்

இதனால், தமிழக வெற்றிக் கழக தலைமை மட்டுமல்லாது, கட்சி தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். இந்த நேரத்தில்தான், சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 'விசில்' சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். எங்கும் 'விசில்' ஒலி பட்டையை கிளப்பியது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் த.வெ.க.செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. எப்போதும் அதிரடி சரவெடியாக பேசும் கட்சியின் தலைவர் விஜய், இந்த முறை சற்று பக்குவமாக பேசியதை காண முடிந்தது.

ஆட்சியில் பங்கு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேசும்போது, ''சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணிக்கு யாரும் வரலாம். கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும்'' என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில், பிற கட்சிகளில் இருந்து பிரிந்த மூத்த நிர்வாகிகள் த.வெ.க.வில் வந்து இணைந்தார்களே தவிர, புதிதாக கூட்டணிக்கு எந்தக்கட்சியும் வரவில்லை. ''கடை விரித்தும் கொள்வார் இல்லை'' என்று சொல்வார்களே, அதுபோல் கூட்டணி கதவுகள் திறந்திருந்தும் யாரும் வரவில்லை.

மாஸ்டர் பிளான்

இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அடுத்த 'மாஸ்டர் பிளானை' புதிதாக உருவாக்கியுள்ளார். அதை கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய்யும், ஏனைய நிர்வாகிகளும் பேசிய பேச்சில் இருந்து காணமுடிந்தது.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனர். இந்த பணிகள் முடிந்த பிறகு வாக்காளர்களின் எண்ணிக்கை 5கோடியே 43 லட்சத்து 77 ஆயிரமாக குறைந்தது. அதாவது, 97 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது, புதிதாக வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதில் 15 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

அதனால், வரும் சட்டசபை தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் 2கோடியே 22 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் வீட்டுக்கு ஒருவர் வீதம் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டாலே, 40 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தமிழக வெற்றிக் கழகம் நம்புகிறது. மேலும், கள்ள ஓட்டு போடுவதை மட்டும் தடுத்துவிட்டாலே வெற்றி எளிதாகிவிடும் என்று நம்புகின்றனர்.

 விசில் சத்தம் ஓங்கி ஒலிக்குமா..?

அதனால்தான், விஜய் பேசும்போது, ''தனியா நின்னாலும் கெத்தா ஜெயிப்போம். யாருக்காகவும், எதற்காகவும் அரசியல் சமரசம் செய்யவே கூடாது. தயவுசெய்து ஒற்றுமையாக இருந்து, சேர்ந்து உழைத்து வெற்றி பெற வேண்டும். கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். கொஞ்சம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செய்வீர்கள் அல்லவா. என் மீதான அன்பு உண்மை என்றால் உழைப்பில் காட்டுங்கள். த.வெ.க.வினர் அனைவரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஜனநாயகப் போரை வழிநடத்தப்போகும் தளபதிகளே நீங்கள் தான். ஒவ்வொரு ஓட்டும் த.வெ.க.வுக்குத்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும். இது தேர்தல் கிடையாது. ஜனநாயகப் போர்'' என்று பேசியுள்ளார்.

விஜய்யின் பேச்சை வைத்து பார்க்கும்போது, வரும் தேர்தலை தனித்து சந்திப்பது என்று த.வெ.க. முடிவு செய்திருப்பதும், கள்ள ஓட்டு போடுவதை த.வெ.க. பூத் ஏஜெண்டுகள் கண்ணும் கருத்துமாக இருந்து தடுத்தாலே வெற்றி கிடைத்துவிடும் என்று நம்புவதையும் காண முடிகிறது. ஒரு விசில் சத்தம் எப்படி பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பேருந்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறதோ, அதேபோல் வரும் தேர்தலில் விசில் சத்தம் ஓங்கி ஒலித்தால், கோட்டையையும் கட்டுப்படுத்துவதற்காக வாய்ப்பு கிடைக்கும். விசில் சத்தம் ஓங்கி ஒலிக்கப்போகிறதா?, அல்லது அடங்கப்போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்