விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்காக மாறாது - அமைச்சர் ரகுபதி பேட்டி
விஜய்யின் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்காது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.;
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரம் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தி.மு.க. மக்கள் மத்தியில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதால்தான் எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள். பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டு வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
தமிழகம் முழுவதும் உள்ளவர்களை அழைத்து வந்து திருச்சியில் ஒரு இடத்தில் வைத்து போக்குவரத்து நெரிசலையும், மக்களுக்கு என்னென்ன தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை த.வெ.க.வினர் செய்திருக்கிறார்கள்.
த.வெ.க.வினர் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து கூட்டம் நடத்த வேண்டிய பரிதாப நிலையில் உள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் மேற்கொள்வது என்பது அன்றைய தினம் விடுமுறை. மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள், பள்ளிக்கூடம் உண்டு.
நடிகர் விஜய்யின் வருகையால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி எதுவும் பாதிக்காது. விஜய் பிரசாரத்தில் விதிகளை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும். திருச்சியில் நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டம் தொடர்பாக கேட்கிறீர்கள். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு நடிகர் வடிவேலு தேர்தல் பிரசாரத்திற்கு திடீரென வந்தார். எந்த விளம்பரமும் கிடையாது. ஆனால் அன்று கூடிய கூட்டம் மாதிரி வேறு எங்கும் கூடவில்லை. அவை வாக்காக மாறியதா? கிடையாது. அது தான் இதுவும். வடிவேலுவும், விஜய்யும் இருவரும் சினிமா நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.