வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தமிழகம் வருகை
தமிழகத்தில் 95.96 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் முகவர்களாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2.38 லட்சம் பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 728 பேருக்கு அதாவது 95.96 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. அவற்றில் 2 கோடியே 59 லட்சத்து 786 படிவங்கள் அதாவது 40.40 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை மதிப்பாய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு 3 நாட்கள், இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வருகை தர உள்ளனர். அவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தேர்தல் கமிஷனின் ஊடகப் பிரிவு அதிகாரி பவன், தேவன்ஷ் ஆகியோர், எஸ்.ஐ.ஆர். தொடர்பான ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் பற்றி மதிப்பாய்வு செய்வார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வையும் மேற்கொள்வார்கள்.
தேர்தல் கமிஷனின் இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, எஸ்.ஐ.ஆரின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வார். அவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி, அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வார். தேர்தல் கமிஷனின் செயலாளர் மதுசூதன் குப்தா, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்.