வாக்காளர் சிறப்பு திருத்தம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.;

Update:2025-11-09 05:30 IST

சென்னை,

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.

சிறப்பு திருத்த பணி என்கிற பெயரில் எந்தவொரு உண்மையான வாக்காளர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக்கூடாது? என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

அந்த அடிப்படையில் சிறப்பு திருத்த பணியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் முறையாக சென்று சேருவதற்கும், தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள காலத்துக்குள் அந்த படிவங்களை நிரப்பி வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்குவதற்கும் தேவையான உதவிகளை செய்து இந்த பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்