புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் நடைப்பயிற்சி கட்டணம் குறைப்பு

புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.;

Update:2026-01-22 21:37 IST

சென்னை,

தொல்காப்பிய பூங்கா தொடர்பாக வெளியான செய்திக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கம் பின்வருமாறு:

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பிய பூங்கா 24.10.2025 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைகள்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதனால் தற்போது ஓர் அமர்விற்கு 250 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்காக காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் 365 நாள்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்விக்காக கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவ, மாணவியர் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் நீங்கலாக) காலை 9:30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாள்கள் தவிர) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. சீரமைப்பிற்குப் பிறகு நடைப்பயிற்சிக்காக அனுமதி பெற்றவர்கள் நீங்கலாக 24.10.2025 முதல் இன்றுவரை 6,843 மாணவ, மாணவியரும் 20,233 பொதுமக்களும் பூங்காவைப் பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, மேற்கொண்ட இச்சுற்றுச்சூழல் சீரமைப்பின் விளைவாக அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 549 வகையான உயிரினங்கள் இப்பூங்காவில் உள்ளன. சீரமைப்பிற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 141 ஆக மட்டுமே இருந்தது. தற்போது, தொல்காப்பியப் பூங்கா நகர்ப்புர ஈரநில உயிரிப் பல்வகைமையின் வாழ்விடமாகத் திகழ்கிறது.

சீரமைப்பிற்கு முன்பு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு 1.95 கி.மீ. தூரம் இருந்தது. தற்போது சீரமைப்புக்குப் பின் கூடுதலாக 1.25 கி.மீ வசதி ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 3.20 கி.மீ நடைப்பயிற்சிக்கு தற்போது காலை மற்றும் மாலை இருவேளைகளில் அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டி உள்ளதால், புதியவர்களுக்கு அனுமதி வழங்க இயலாத நிலை உள்ளது. ஆனால் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அனைத்துத் தரப்பினருக்கும் இப்போதும் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த அனுமதி பெறுவதற்கு பொதுமக்களுக்குத் தடையேதுமில்லை. எனினும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவதற்காக, கோரிக்கைகள் அதிகமாக உள்ளதால் கூடுதல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது 500 என்ற எண்ணிக்கையில் உள்ள நடைப்பயிற்சி அனுமதியை 1.2.2026 முதல் 3,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி அடையாள அட்டை மூன்று வண்ணங்களில் வழங்கப்படும். ஒவ்வொரு வண்ண அடையாள அட்டை பெற்ற பயனாளிகளும்

வாரத்தில் மூன்றுமுறை வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அதற்கான நடைப்பயிற்சி அடையாள அட்டை பெறுவதற்கான திருத்திய கட்டணமாக ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.500/- என்று இருப்பது தற்போது ரூ.250/- ஆகவும், 3 மாதங்களுக்கு ரூ.1,500/- என்று இருப்பது ரூ.750/- ஆகவும், 6 மாதங்களுக்கு ரூ.2,500/- என்று இருப்பது ரூ.1,250/- ஆகவும், 12 மாதங்களுக்கு ரூ.5,000/- என்று இருப்பது ரூ.2,500/ ஆகவும் குறைத்து நிர்ணயிக்கப்படும்.

ஒவ்வொரு அமர்விலும் 300 பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவினுள் இருக்கும் வகையில் முறைப்படுத்தப்படுவார்கள். மேலும், நுழைவுசீட்டு முன்பதிவு மற்றும் பிற விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்