ஒருவருக்கொருவர் உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்தால், அந்த கூட்டணி எப்படி வெற்றிபெறும்? - கனிமொழி எம்.பி.

தஞ்சாவூரில் 26ம் தேதி நடைபெற உள்ள “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.;

Update:2026-01-22 20:52 IST

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு, வரும் 26.1.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று (22.1.2026) செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மாநாட்டுக்கான நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சியே வரவேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் பெண்கள் தி.மு.க.-வைச் சார்ந்து நிற்கிறார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் மறந்துவிட்டார்கள். அது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் ஏற்கனவே அறிவித்த ஸ்கூட்டி கொடுக்கும் திட்டத்தையே மக்கள் மறந்து விட்டனர்" என்று கூறினார்.

மேலும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "எங்களுடைய கூட்டணி மக்களுடன் இருக்கக்கூடிய கூட்டணி, முதல்-அமைச்சர் பல ஆண்டுகளாக மக்களுக்காக செய்த சாதனையை உணர்ந்த கூட்டணியாகும். அதனால், தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். ஒருவருக்கொருவர் உடன்பாடே இல்லாதவர்கள் இணைந்தால், அந்த கூட்டணி எப்படி வெற்றிபெறும்?. அ.தி.மு.க. பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடையை கவலையாக உள்ளது. தேர்தல் வருவதால் பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவார்" என்று பேசினார்.

இந்த ஆய்வின்போது தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தி.மு.க. மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்