அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் டிடிவி தினகரனுக்கு என்ன? ஆர்.பி. உதயகுமார் காட்டம்

நம்பி வந்தவர்களை அரசியல் அனாதையாக்கியவர் டிடிவி தினகரன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார்.;

Update:2025-10-05 19:38 IST

மதுரை,

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நேற்று (அக்டோபர் 4-ம் தேதி) தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டி.டி.வி. தினகரன் பேசுகையில், கடந்த ஒரு வாரமாக கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட, இந்த விவகாரத்தை நிதானமாக கையாளுகிறார். ஆனால் பதவி வெறியில் எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல பேசுகிறார். ஆளுங்கட்சிதான் காரணம் என்று சாடுவதெல்லாம் மோசம். ராமசாமியோ? குப்புசாமியோ? எடப்பாடியை தவிர யார் வந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது ஆதரவு உண்டு என்றும், பொதுச்செயலாளர் பதவிக்காக அடிப்படை சட்டத்தையே மாற்றியவர் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தேர்தலை வீழ்த்துவோம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி உண்மையான அதிமுக தொண்டர்களை ஒன்று சேர்த்து துரோகத்தை வென்றெடுப்போம். வரும் தேர்தலில் 4 முனை போட்டி இருக்கும். அமமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பழனிசாமியை வீழ்த்தாமல் அமமுக ஓயாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், நம்பி வந்தவர்களை அரசியல் அனாதையாக்கியவர் டிடிதினகரன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

தமிழகத்தில் தனிநபர் (டிடிவி தினகரன்) தன்னுடைய ஆளுமை தோல்வியினாலும் தொடர் இயலாமையினாலும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு அது பொறாமையாக மாறி இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சியால் பொறாமையால், இயலாமையால் பேசி வருவதை யாரும் பொருட்படுத்தவில்லை. சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக அவர் கருத்து கூறியுள்ளார். அவரிடம் சில கேள்விகளை வைக்கிறேன்.உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டு சென்றீர்கள். உங்களை நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள். அவர்களை அரசியல் அனாதையாக்கிவிட்டீர்கள். அவர்களின் எதிர்காலம் என்ன? பதில் சொல்லுங்கள். இன்னும் பலர் உங்களை விட்டு எப்போது ஓடலாம் என்று சுபமுகூர்த்தம் பார்த்துக்கொண்டிரு க்கிறார்கள். அதற்கு பதில் சொல்லுங்கள்.

அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் உங்களுக்கு (டிடிவி தினகரன்) என்ன? டிடிவி தினகரன் தனது இருப்பை காட்டி கொள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூறியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பாஜக கூட்டணியை விட்டு அமமுக விலகிய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்