கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியான தகவல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது;

Update:2025-09-24 11:22 IST

சென்னை,

கிளாம்பாக்கத்தில் புதிய  பேருந்து நிலையம் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள்  இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் இருக்கிறது. இதனால்,  பஸ்  நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், வண்டலூர் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது.பணிகள் தொடங்கி நடந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுதவிர, மழைநீர் கால்வாய் பணி காரணமாக மேலும் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துடன் பேருந்து நிலையத்தை ஸ்கைவாக்குடன் இணைக்கும் பணிகள் ஜனவரியில் நடைபெறும் என்றும், ரயில் நிலையப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையை அடைய, பயணிகள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அல்லது வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ஆட்டோக்களில் சென்று அங்கிருந்து மின்சார ரயிலைப் பிடிக்க வேண்டும். இதற்காக, பயணிகள் அதிகக் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலையில், இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்