மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் அவர் எடுத்து சென்றார்.;

Update:2025-09-12 12:28 IST


தமிழகத்தையே உலுக்கிய இரட்டை கொலைச் சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நேற்று அதிகாலை அரங்கேறி அதிரச் செய்தது. ஒழுக்கம் தவறினால் ஏற்படும் இழப்பு பேரிழப்பாக அமையும் என்பதுடன் குடும்பத்தையும் வெகுவாக பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவமே பெரும் எடுத்துக்காட்டாக அமைந்தது.

கொலையாளி கொளஞ்சியும், கொலையானவர்களில் ஒருவரான லட்சுமியும் கணவன்-மனைவி ஆவார்கள். ஆனால், கொளஞ்சிக்கு இது 2-வது திருமண பந்தம் ஆகும்.

அவருக்கு ஏற்கனவே கலியம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் இருந்தனர். ஆனால், கொளஞ்சியின் நடவடிக்கை பிடிக்காத கலியம்மாள், அவரை பிரிந்து சென்றிருக்கிறார். அந்த பிரிதலின்போது ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகள் இறந்திருக்கின்றனர். 3 குழந்தைகளுடன் கலியம்மாள் வேறு ஊருக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, தன்னைவிட 20 வயது குறைவான நாட்டார்மங்கலத்தை சேர்ந்த லட்சுமியை கொளஞ்சி 2-வது திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கூலித் தொழிலாளியான கொளஞ்சி, பெரும்பாலும் வெளியூர் வேலைக்கு சென்றுவிடுவார். இடை இடையேத்தான் வீட்டுக்கு வருவார். அப்போது, ஊரார் சிலர் அவரிடம் உனது மனைவியின் நடவடிக்கை சரியாக இல்லை என்று கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த கொளஞ்சி, ஊரார் குற்றச்சாட்டு குறித்து மனைவியிடமே நேரடியாக கேட்டுள்ளார். இதுபோன்ற தவறான செயல் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார். ஆனாலும், லட்சுமி அதை கேட்பதாக தெரியவில்லை. கணவர் வெளியூர் செல்லும் நேரத்தில் எல்லாம் கள்ளக்காதன் தங்கராசுவை தனிமையில் சந்தித்து இனிமை கண்டுவந்தார்.

சம்பவ தினத்தன்று கொளஞ்சிக்கு புதிய சிந்தனை தோன்றியது. இன்றைக்கு மனைவி மற்றும் கள்ளக்காதலனை எப்படியும் கையும், களவுமாக பிடித்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வலையையும் விரித்தார். மனைவி லட்சுமியிடம் எப்போதும் வெளியூர் போவதுபோல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால், வீட்டை கடந்தவர் தெருவை கடக்கவில்லை. மனைவியின் செயலை அறிந்துகொள்ள இருட்டில் ஒதுங்கிவிட்டார்.

கணவர் சென்றதை அறிந்த லட்சுமி உடனே கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரும் ஆசையுடன் வந்திருக்கிறார். வீட்டின் உள்ளே 3 பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்ததால், கள்ளக்காதலன் தங்கராசுவை மாடிக்கு லட்சுமி அழைத்து சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்த கொளஞ்சி, வீட்டிற்குள் மனைவி இல்லாததால் மாடிக்கு சென்று ரகசியமாக பார்த்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்சி ஆத்திரம் அடையச் செய்தது. கீழிறங்கி வந்த கொளஞ்சி, வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு கொலை வெறியுடன் மாடிக்கு சென்றார். இருட்டில் யாரோ ஒருவர் வருவதை அறிந்த கள்ளக்காதல் ஜோடி சுதாரித்துக்கொண்டு எழும்பியது. ஆனால், வந்து நின்றது கணவர் கொளஞ்சி என்று தெரிந்ததும் லட்சுமி சற்று அதிர்ந்துதான் போனார்.

திருடனுக்கு தேள் கொட்டியதைப்போன்று உணர்ந்தார். கொலை வெறியுடன் நின்ற கொளஞ்சியின் கோரப்பார்வை முதலில் தங்கராசுவின் பக்கம் திரும்பியது. அவர் சுதாரித்துக்கொண்டு தப்பிக்க முயன்றபோது, அவரை தடுத்து சரமாரியாக கொளஞ்சி வெட்டினார். அதை தடுக்க வந்த லட்சுமியையும் கொளஞ்சி விட்டுவைக்கவில்லை. அவரையும் வெட்டி சாய்த்தார். ரத்த வெள்ளத்தில் இருவரும் இறந்துகிடப்பதை பார்த்த பிறகும் கொளஞ்சியின் கொலைவெறி அடங்கவில்லை. அதனால், இருவரின் தலையையும் கொடுவாளால் அறுத்து துண்டாக்கினார்.

ரத்தம் சொட்டச் சொட்ட இருந்த 2 தலைகளையும் ஒரு சாக்குப்பையில் போட்டுக்கொண்டு கிளம்பினார். 2 கொலைகளை செய்தும் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் சாதாரணமாக வீட்டைவிட்டு தலைகள் இருந்த பையுடன் மொபட்டில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். அங்கு பேருந்து நிலையம் வந்த கொளஞ்சி, மொபட்டை அங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து வேலூர் செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். பயணிகளோடு பயணிகளாக சாதாரணமாக அமர்ந்துகொண்டார்.

யாருக்கும் அவர் மீது சந்தேகம் வரவில்லை. காலை 7 மணிக்கு பஸ் வேலூர் சென்றதும் நேராக மத்திய சிறைக்கே சாக்குப்பையுடன் சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், யாரோ மனநலம் பாதித்தவர் வருகிறார் என்று நினைத்து கொளஞ்சியை தடுத்தனர். அவரிடம் சாதாரணமாக பேசியதுடன், இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறி புறப்பட கூறியுள்ளனர். அப்போது கொளஞ்சி, கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் எடுத்து வந்த தகவலை கூறியுள்ளார்.

அதை நம்பாத போலீசார், எதற்கும் சாக்குப் பையை கொஞ்சம் பிரித்து பார்ப்போம் என்று அதை திறந்தபோது அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். 2 தலைகள் இருப்பதை கண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில், கொளஞ்சியின் வீட்டு மாடியில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாக கிடப்பதை அருகில் உள்ள வீட்டினர் கண்டு, அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்ததுடன் பெண் உடலை லட்சுமி என்று அடையாளம் கண்டுவிட்டனர். ஆனால், ஆண் உடலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அருகில், அவருடைய செல்போன் கிடந்ததால், அதை எடுத்து ஆய்வு செய்தபோது, இறந்துகிடந்தது தங்கராசு என்பதை கண்டுபிடித்தனர். தலைகள் எங்கே என்று அவர் தேடியபோது, அதற்குள் வேலூரில் இருந்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது. இரட்டை தலைகளுடன் கொளஞ்சி அங்கே இருப்பதை தெரிவித்தனர். உடனே,வரஞ்சரம் போலீசார் வேலூருக்கு விரைந்தனர்.

முன்னதாக, இருவரின் உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வேலூரில் வைத்து கொளஞ்சியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் போலீசாரிடம் சாதாரணமாக பேசியுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி லட்சுமிக்கும், தங்கராசுவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்ததும் இருவரையும் கண்டித்தேன். ஆனாலும், அவர்கள் கேட்பதாக தெரியவில்லை. சந்திப்பை தொடர்ந்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இதற்கு முடிவு கட்டநினைத்தேன். வழக்கம்போல் வெளியூர் வேலைக்கு செல்வதுபோல் கிளம்பினேன். சற்று நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, நான் நினைத்ததுபோல் நடந்துவிட்டது. அதனால், ஆத்திரத்தில் இருவரையும் கொலை செய்ய நினைத்தேன். கொடுவாளை எடுத்து வெட்டிக் கொன்றேன். ஆனாலும், எனது ஆத்திரம் அடங்கவில்லை. அதனால், இருவரின் தலைகளையும் துண்டாக்கினேன். அதை ஒரு சாக்குப்பையில் போட்டுக்கொண்டு போலீசில் சரணடைய புறப்பட்டேன். எப்படியும் சிறைக்குத்தான் கடைசியில் கொண்டுவருவார்கள். எனவே, நாமே நேரடியாக சிறையில் சென்று சரணடைவோம் என்று இங்கு வந்தேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கணவன்-மனைவி இடையே ஒழுக்கம் இல்லாத காரணத்தால் அந்த குடும்பமே சிதைந்துவிட்டது. ஏற்கனவே, கொளஞ்சியின் முதல் மனைவி தனது 2 குழந்தைகளின் உயிர்களை பறிகொடுத்த நிலையில், தற்போது 2 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. தந்தை கொளஞ்சி சிறைக்கு சென்றுவிட்டதால், பெண் குழந்தைகள் 3 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்