கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
காட்டு யானை திடீரென வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூரில் காட்டு யானை திடீரென குடியிருப்பு பகுதியில் நுழைந்ததால், பொதுமக்கள் அலறியடித்து ஓடி உயிர் தப்பினர்.
இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன. அப்போது தொரப்பள்ளி அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் இருந்து காட்டு யானை ஒன்று வெளியே வந்து சாலை நடுவில் நின்று வாகனங்களை வழிமறித்தது. இதனால் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் காட்டு யானை அங்கிருந்து செல்லாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. பின்னர் சாலையின் இருபுறமும் நின்றிருந்த வாகனங்களை நோக்கி நடந்து சென்றது. இதனால் மைசூரு பகுதியில் இருந்து வந்த வாகன ஓட்டிகள் வந்த வழியாக பின்னோக்கி வாகனங்களை இயக்கி சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் காட்டு யானை சாலையில் நின்றபடி வாகனங்களை வழிமறித்தது.
அதன் பின்னர் சாலையோரம் உள்ள தனியார் நிலத்துக்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இருப்பினும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த வழியாக சென்றனர்.