சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா - அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
100 நாடுகள் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.;
கோப்புப்படம்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 4-வது பதிப்பாக புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித் துறையின் முன் முயற்சியில், பொதுநூலக இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் இணைந்து நடத்துகின்றன.
அதன்படி பன்னாட்டு புத்தகத் திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. 2023-ல் 24 நாடுகளை கொண்டு தொடங்கப்பட்ட இந்த திருவிழா, 2024-ல் 40 நாடுகள் 39 மொழிகளுடனும், 2025-ல் 64 நாடுகள் 81 மொழிகளுடனும் நடந்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டில் 100 நாடுகள் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.
இந்த திருவிழாவில், தமிழ் இலக்கியங்களை கொண்டாடி, தமிழ்நாட்டை உலக இலக்கிய செழுமையின் மையப் பகுதியை நோக்கி வலுவாக முன்னெடுத்து செல்லப்பட உள்ளதாகவும், இதனை நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது. புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை (லோகோ) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.