அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்- இன்று நடக்கிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடக்கிறது.;
சென்னை,
சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடக்க உள்ளது.இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வானகரத்தில் வாகனங்கள் நிறுத்தவும், உணவு அருந்தவும் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவு அளிக்கப்பட உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதால் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. பல முக்கிய தீர்மானங்கள் இந்த செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்தும் விரிவாக பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் வியூகம், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி கூட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட இருக்கிறது.