மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம்: மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.;

Update:2025-12-10 06:20 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மகளிர் மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வரும் 12-ந்தேதி முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. மதியம் 3 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், 2022-ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்