நெல்லை அருகே ஒர்க்‌ஷாப் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் தீவிர விசாரணை

சுத்தமல்லி பகுதியில் வாகன பழுது நீக்கும் மெக்கானிக் கடை நடத்தி வரும் பாருக் தாக்கப்பட்டு உள்ளார்.;

Update:2025-08-31 09:53 IST

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆர்.கே.ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முகமதுஅலி பாருக் (வயது 40). மனிதநேய ஜனநாயக கட்சியின் பேட்டை பகுதி செயலாளராக உள்ளார். இவர் சுத்தமல்லி விலக்கு பகுதியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சுத்தமல்லி சீனிவாசநகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது காரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக முகமது அலி பாருக்கை செல்போனில் அழைத்துள்ளார்.

ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் உடனே ஒர்க்‌ஷாப்பிற்கு சென்று முகமது அலி பாருக்கிடம் தகராறு செய்தார். 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஆனந்த் அரிவாளை எடுத்து முகமது அலி பாருக்கை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து ஓடினார்.

ஆனாலும் ஆனந்த் ஓடஓட விரட்டி சென்று முகமது அலி பாருக்கை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த முகமது அலி பாருக் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே முகமது அலி பாருக்கை, ஆனந்த் ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் பாளை.பாரூக் தலைமையில் பொருளாளர் முகமது அலி, இளைஞர் அணி அஷ்ரப், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் முருகேசன், முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு கமிஷனர் சந்தோஷ் ஹடிமணியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சுத்தமல்லி பகுதியில் வாகன பழுது நீக்கும் மெக்கானிக் கடை நடத்தி வரும் பாருக் தாக்கப்பட்டு உள்ளார். இதில் சம்பந்தப்பட்டவரை கைது செய்வதுடன், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்