புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் உலக உணவு தினம் கொண்டாட்டம்
மாணவ-மாணவிகள் பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்டு பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து அசத்தினர்.;
சென்னை,
உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவில் 3-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்டு பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து அசத்தினர்.
அதாவது, ராகி களி, ராகி புட்டு, சிகப்பு அரிசி பணியாரம், பீட்ரூட் சூப், சுண்டைக்காய் துவையல், கோதுமை அல்வா, உளுந்து களி, கருப்பட்டி பணியாரம், கம்பு இட்லி, கேழ்வரகு லட்டு, கம்பு கொழுக்கட்டை ஆகியவற்றை மாணவ-மாணவிகளே செய்திருந்தனர். இதை சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து கண்டு ரசித்து மாணவ-மாணவிகளை பாராட்டினார்.
மேலும், பருப்பு உள்ளிட்ட தானியங்களை பயன்படுத்தி இந்திய வரைபடம், தாஜ்மகால், விநாயகர், பறவைகள், கோலம், பூக்கள் போன்றவைகளை மாணவ-மாணவிகள் வடிவமைத்திருந்தனர். உணவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் பிரவீனா, பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.