உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்திய இலவச ஆன்லைன் கருத்தரங்கம்

இதய நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.;

Update:2025-09-27 18:13 IST

இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதய நோய்களைப் பற்றியும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும். இதய பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், உலக இதய தினத்தையொட்டி தினத்தந்தி மற்றும் சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை இணைந்து இன்று இலவச இணையவழி கருத்தரங்கை நடத்தின. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

“ஒவ்வொரு துடிப்பும் முக்கியம்” என்ற தலைப்பில் இதய ஆரோக்கியம் தொடர்பாக, சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் டாக்டர் ராபர்ட் கோயல்ஹோ MS., M.Ch. Director & Chief Paediatric Cardiac Surgeon MIOT Centre for Children’s Cardiac Care, MIOT International, டாக்டர் ரிச்சர்டு சல்தன்ஹா MS., M.Ch., DNB Director - Adult Cardiothoracic and Vascular Surgery, MIOT International, டாக்டர் ஷியாம் குமார் G MD (General Medicine), DM (Cardiology) Senior Interventional Cardiologist, MIOT International, டாக்டர் மணிகண்டன் DNB (General Medicine), DNB (Cardiology) Senior Interventional Cardiologist, MIOT International ஆகியோர் உரையாற்றினர்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விரிவாக விளக்கம் அளித்தனர்.

டாக்டர் ஷியாம் குமார் பேசும்போது, “பெரும்பாலான இதய பிரச்சினைகள் ஒரே நாள் இரவில் ஏற்படுவதில்லை. சிறிய அளவிலான பாதிப்புடன் பல ஆண்டுகளாக அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக இருந்து பின்னர் ஒருநாள் தீவிரம் அடைகிறது. உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வாழ்க்கை முறை மற்றும் மரபியல் பிரச்சினைகள் ஆகியவை இதய நோய்க்கான முக்கியமான மறைமுக காரணிகள் ஆகும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் உரிய சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுக்கலாம். ஆனால் நீண்டகால இதய ஆரோக்கியம் என்பது, வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற அன்றாட பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும்” என்றார்.

டாக்டர் மணிகண்டன் பேசும்போது, மாரடைப்பு ஏற்பட்டால் அந்த நோயாளியின் உயிரை காப்பாற்ற முதல் ஒரு மணிநேரம் மிகவும் முக்கியமானது என்றும், இதுபோன்ற சூழ்நிலைகளில், மருத்துவ உதவி கிடைக்கும் வரை அடிப்படை முதலுதவியான CPR செய்வது முக்கியம் என்றும் கூறினார்.

டாக்டர் ரிச்சர்டு சல்தன்ஹா பேசும்போது, தொடர்ச்சியாக மார்பு வலித்தாலோ அல்லது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார். மேலும், விரைவாக குணமடைவதை உறுதி செய்யும் வகையில் இதய அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

டாக்டர் ராபர்ட் கோயல்ஹோ பேசுகையில், “குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த குழந்தைக்கு இதய பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை தற்போதைய நவீன பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும். குழந்தைகள் பால் குடிப்பதற்கு சிரமப்படுதல், தொடர்ந்து மார்பு நோய்த்தொற்றுகள் அல்லது சரியான வளர்ச்சி இல்லாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இன்றைய மருத்துவ முன்னேற்றங்களால், பெரும்பாலான பிறவி இதய குறைபாடுகளை சரிசெய்ய முடியும். இதன்மூலம் குழந்தைகள் முழுமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்