இளம்பெண்ணுக்கு 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது - சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சி

சண்முகப்பிரியா மீண்டும் 8-வது முறையாக கர்ப்பம் அடைந்தார்.;

Update:2025-04-25 18:39 IST

சேலம்,

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே கூட்டாத்துப்பட்டி சின்னஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகப்பிரியா (33). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், சண்முகப்பிரியா மீண்டும் 8-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். ஆனால் அவர் முறையாக கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்யாமலும், மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட எந்த சிகிச்சை பெறாமலும் இருந்துள்ளார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காரிப்பட்டி வட்டார மருத்துவக்குழுவினர் கர்ப்பிணி சண்முகப்பிரியாவை மீட்டு பிரசவத்திற்காக கூட்டாத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், சண்முகப்பிரியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இளம்பெண்ணுக்கு 8-வது குழந்தை பிறந்ததை அறிந்து சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 7 பெண் குழந்தைகளுக்கு பிறகு 8-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்