செல்போன் செயலியை பயன்படுத்தி கல்லூரி மாணவியை கண்காணித்த வாலிபர் கைது

செல்போனில் விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் மாணவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.;

Update:2025-09-19 11:55 IST

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கணினி மையத்தில் தரங்கம்பாடி அருகே பெரம்பூர் அகரவல்லம் சீதக்காதி நகரை சேர்ந்த இதயத்துல்லா மகன் முகமது அப்ரித் (28 வயது) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த மையத்திற்கு நீடுர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது கல்லூரி மாணவியிடம் பாஸ்போர்ட் பதிவு செய்வதற்கு அவரது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று முகமது அப்ரித் கூறி உள்ளார். இதனால் அந்த மாணவி அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்த செயலியை பயன்படுத்தி முகமது அப்ரித், தனது செல்போனில் இருந்து அந்த மாணவியின் செல்போனை இணைத்து அவருக்கே தெரியாமல் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது செல்போனில் விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் மாணவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தாயார், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முகமது அப்ரித், கல்லூரி மாணவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்த செயலியை பயன்படுத்தி அவரை கண்காணித்து வந்ததும், இந்த மாணவி தவிர மேலும் 3 மாணவிகளின் செயல்பாடுகளையும் அவர் கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்ரித்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்