நீங்கள் மட்டும் வாங்கலாமா?
ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள்தான் முதல் இடத்தில் இருக்கிறது.;
டிரம்ப், முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இந்திய சுற்றுப்பயணத்தை மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நரேந்திர மோடி எனது நண்பர் என்பதை மிகவும் பெருமையோடு கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் இப்போது இரண்டாவது முறையாக ஜனாதிபதியானவுடன் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. நட்பு நாடு என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாதது போல நடந்து கொள்கிறார். பதவியேற்றவுடன் ‘அமெரிக்கா முதலில்’ என்பதையே தாரக மந்திரமாக பிரகடனப்படுத்தினார். அவர் நாடு அமெரிக்கா, அதை முதலில் என்று சொல்வது தவறே இல்லை. அதற்காக மற்ற நாடுகளையெல்லாம் மட்டம் தட்டி, மிரட்டி அடிபணிய வைப்பது என்பது ஏற்புடையதல்ல.
அனைத்து நாடுகள் மீதும் வர்த்தக போரை தொடங்கியுள்ளார். அதில் இந்தியாவை அதிகமாக குறிவைத்து நாள்தோறும் ஒவ்வொரு மிரட்டல்களை விடுப்பதுதான் என்ன ஆயிற்று டிரம்ப்புக்கு என்று கேட்க வைக்கிறது. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 25 சதவீத வரி என்று சவடால் விட்டவர், இப்போது 50 சதவீத வரி என்று அறிவித்து இருக்கிறார். இந்திய ஏற்றுமதியில் மருந்து பொருட்கள் கணிசமாக இருக்கிறது. இப்போது மருந்து பொருட்களுக்கு அடுத்தவாரம் முதலில் 150 சதவீதமும், பின்பு 250 சதவீதம் வரையும் வரி விதிக்கப்போவதாக மிரட்டுகிறார். இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் ரூ.87 ஆயிரத்து 741 கோடி அளவில் அமெரிக்காவுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் அவர் கூறும் காரணங்கள்தான் விந்தையாக இருக்கிறது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. அந்த பணத்தை வைத்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்து பல மக்கள் உயிர் இழக்க காரணமாக இருக்கிறது. ரஷிய போர் எந்திரத்துக்கு எரிபொருள் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆக ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்குவதைத்தான் முக்கிய காரணமாக கூறுகிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு காரணம், அங்கு உலக சந்தையைவிட மிகவும் விலை குறைவாக இருக்கிறது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு பெரும் லாபம் கிடைக்கிறது. டிரம்ப்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால் நாங்களும் இந்தியாவுக்கு இறக்குமதியில் பல கட்டுப்பாடுகளை விதிப்போம் என ஐரோப்பிய யூனியனும் கொக்கரிக்கிறது.
ஆனால் ரஷியாவிடம் இருந்து வாங்காதே என்று சொல்லும் அமெரிக்கா, ரஷியாவிடம் அணுமின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களுக்கு தேவையான யுரேனியம், மின்சார வாகனத்துக்கான பேட்டரிகளை தயாரிக்க தேவைப்படும் பல்லாடியம், விவசாயத்துக்கான உரங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது? இதுபோல இந்தியாவை குறை சொல்லும் ஐரோப்பிய யூனியனும் கச்சா எண்ணெய், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்துதான் இப்போது இறக்குமதி செய்கிறது.
அதிலும் ரஷியாவிடம் இருந்து எரிவாயு வாங்குவதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள்தான் முதல் இடத்தில் இருக்கிறது. ஆக, ‘உபதேசம் பண்ணுகிறேன் அது ஊருக்குத்தானடி எனக்கு இல்லை’ என்ற கதையாகத்தான் இது இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது என்று சொல்லும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கண்ணாடியில் முதலில் தங்கள் முகத்தை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும் இந்தியாவின் வர்த்தக கூட்டாளி யார்? என்பதை இந்தியாதான் முடிவு செய்யமுடியுமே தவிர அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அல்ல.