மனித தவறுதான் இந்த விபத்துக்கு காரணம்

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கோர விபத்து தமிழ்நாட்டில் நடந்துள்ளது.;

Update:2025-07-10 03:42 IST

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கோர விபத்து தமிழ்நாட்டில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்து செல்லமுயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயில் மோதியதால் அந்த வேன் பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு சுக்கு நூறாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 3 மாணவ செல்வங்களின் உயிர்களை பறித்துவிட்டது. நல்ல வேளையாக அந்த வேனில் நிறைய பள்ளி குழந்தைகள் இல்லை. டிரைவர் மற்றும் 4 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். இவ்வளவுக்கும் அந்த கேட்டின் பணியில் ஒரு கேட் கீப்பரும் இருந்தார். அவர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த இளைஞர். அவருக்கு தமிழும் தெரியாது. ரெயில் வரும்போது கேட்டை மூடவேண்டும் என்பது பொதுவான நியதி.

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கேட் கீப்பர் தன்னுடைய பொறுப்பில் உள்ள கேட்டை மூடி பச்சை கொடி காட்டுவார். ரெயில் என்ஜின் ஓட்டுனர் அதைப் பார்த்துதான் கேட்டை கடந்து செல்வார். அந்தமுறை இப்போது பின்பற்றப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ரெயில் வரும்போது காலை 7.30 மணிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கேட் திறந்து இருந்ததால்தான் அதை கடந்து சென்றிருக்கிறது. இவ்வளவுக்கும் அந்த கேட் கீப்பரும் அந்த நேரத்தில் கேட் பக்கத்திலே உள்ள கேபினில்தான் தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். ரெயில்வே கேட் இண்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டிருந்தால், கேட் மூடியிருந்தால் மட்டுமே சிக்னல் போடமுடியும். ரெயிலும் சிக்னலை பார்த்துவிட்டுதான் கடந்து செல்லமுடியும். இண்டர்லாக்கிங் இல்லையென்றால் கேட் கீப்பர் கேட்டை இழுத்து மூடிவிட்டு அந்த தகவலை அடுத்து இருக்கும் ரெயில் நிலைய அதிகாரியான ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிவிக்கவேண்டும். இதற்கெல்லாம் தொலைபேசி வசதியும் இருக்கிறது. ஆனால் இந்த விதிகள் எல்லாம் பின்பற்றப்பட்டிருக்கிறதா? என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

முதல் கட்ட விசாரணையில் இது முழுக்க, முழுக்க கேட் கீப்பரின் தவறு என்பது தெரிகிறது. மேலும் கேட் கீப்பர் என்பவர் சாதாரண பாமர மக்களோடு தொடர்பில் இருப்பவர் என்பதால் அவருக்கு தமிழ் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். இன்னொரு அதிர்ச்சித்தரத்தக்க தகவல் என்னவென்றால் இந்த குறிப்பிட்ட கேட்டுக்கு பதிலாக சுரங்கப்பாதை கட்டித்தருகிறோம், முழு செலவையும் ரெயில்வே நிர்வாகமே ஏற்கும், அதற்கான அனுமதியை மட்டும் தரவேண்டும் என்று கேட்டும் மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டுவிட்டது என்று ரெயில்வே நிர்வாகம் கூறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சரியான பதிலை தரவில்லை.

பொதுவாக கேட் இருக்கும் இடங்களில் சுரங்கப்பாதை வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம்தான் ரெயில்வேக்கு கோரிக்கை விடுவது வழக்கம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் அவர்களாகவே கேட்டும் உரிய அனுமதி கொடுக்காதது பெரிய குறையாகும். சுப்ரீம் கோர்ட்டும், தமிழக அரசின் போக்குவரத்து துறையும் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் பள்ளி வாகனங்கள் என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது. அதன்படி, ரெயில் தண்டவாளங்களை கடக்கும் முன் வாகனத்தில் உள்ள உதவியாளர் கீழே இறங்கி வந்து தண்டவாளத்தில் ரெயில் வரவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, பாதுகாப்பாக வாகனம் கடக்கலாம் என்று டிரைவருக்கு செய்கை மூலமாக தகவல் கொடுக்கவேண்டும். இந்த விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. மொத்தத்தில் பல கட்டங்களில் நடந்த மனித தவறுகளே இந்த மனதை உருக்கும் விபத்துக்கு காரணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்