தாமதமாகும் தீபாவளி விற்பனை
ஜி.எஸ்.டி.யில் அறிவிக்கப்படப்போகும் பல சீர்திருத்தங்கள் மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.;
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி மந்திரிகளையும் உள்ளடக்கியதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சில் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கேரள நிதி மந்திரி தலைமையில் மந்திரிகள் குழுவை அமைத்திருந்தது. இவர்கள் அதுதொடர்பான சீர்திருத்தங்களை அறிக்கையாக வகுத்து கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து அடுத்த மாதம் 3, 4-ந்தேதிகளில் டெல்லியில் நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய அரசாங்கம் கொடுத்துள்ள ஆலோசனைகளில் வரி விகிதம் எளிமையாகவும், சராசரி வரி விகிதத்தைவிட குறைவாகவும் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையில் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது, ஜி.எஸ்.டி.யில் அறிவிக்கப்படப்போகும் பல சீர்திருத்தங்கள் மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று அறிவித்தார். தற்போது ஜி.எஸ்.டி. வரி 0.25, 3, 5, 12, 18, 28 ஆகிய விகிதங்களிலும், 28 சதவீதத்துக்கு மேல் சில பொருட்களுக்கு மேல் வரியும் விதிக்கப்படுகிறது. 7 விகிதங்களில் இருக்கும் வரி இனி 4 ஆக குறைக்கப்படும். வைரம், மதிப்புமிக்க கற்கள், நகைகள் போன்ற சில வகை பொருட்களுக்கு இப்போது 0.25 மற்றும் 3 சதவீதத்தில் விதிக்கப்படும் வரி இனி ஒரே வரியாக 1 சதவீதத்துக்கு கீழ் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து இருக்கும் 5, 12, 18, 28 சதவீத வரி விகிதங்களில் 12 சதவீதமும், 28 சதவீதமும் மற்றும் மேல்வரியும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக 5, 18, 40 சதவீதங்களில் மட்டும் இனி ஜி.எஸ்.டி. இருக்கும். இப்போது 12 சதவீத வரிக்கு உட்பட்டுள்ள 90 சதவீத பொருட்கள் இனி 5 சதவீத வரி விகிதத்துக்கு கொண்டுசெல்லப்படுவதால் இதன் விலையெல்லாம் குறையும். இதுபோல 28 சதவீத வரி விதிப்பின் கீழ் இருக்கும் 90 சதவீத பொருட்கள் இனி 18 சதவீதத்துக்கு செல்லும். அந்த பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதனால் ஆடம்பர கார்கள் பட்டியலில் இல்லாத சிறிய கார்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற பல பொருட்கள் இப்போது 28 சதவீத வரி மற்றும் மேல் வரிக்கு உட்பட்டுள்ள நிலையில் இனி 18 சதவீத வரியின் கீழ் மட்டுமே இருக்கும். இந்த வரிமாற்றம் தீபாவளி விற்பனையை பெரிதும் தாமதப்படுத்தியுள்ளது.
வழக்கமாக தீபாவளி விற்பனை ஆடி மாதத்தில் இருந்தே தொடங்கிவிடும். நடைபெற இருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்று அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்துவிடும். இதனால் அப்போது விலை குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதை மக்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். எல்லோருமே வரிவிகித குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமலுக்கு வந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்ற உணர்வில் இருப்பதால் வழக்கமான விற்பனை இப்போது இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். அக்டோபர் 1-ந்தேதி முதல் வரிகுறைப்பு இருந்தால் இப்போது பல பொருட்களை கூடுதல் வரி கொடுத்து வாங்கி ‘ஸ்டாக்’ வைத்துள்ள வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள், அவர்கள் நலனையும் பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.