மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்த ரிசர்வ் வங்கி
மக்களின் கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.;
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி தங்க நகை கடன்கள் மீது சில கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட வரைவு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி தற்போது நகைகளுக்கு அதன் மதிப்பில் 90 சதவீதம் வரை வழங்கப்பட்டு வரும் கடன் இனி 75 சதவீதம்தான் வழங்கப்படும். அடமானம் வைப்பவர்கள் அந்த நகையை வாங்கியதற்கான ரசீது அல்லது ஆதாரத்தை தாக்கல் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனை அனைவராலும் பூர்த்தி செய்ய முடியாது. ஏனென்றால் பொதுவாக நகைகளெல்லாம் பெண்களுக்கு பல்வேறு நிகழ்வுகளில் பரிசாக, சீர்வரிசையாக கிடைக்கும் ஒன்று. அதை கொடுப்பவர்கள் ரசீதை கொடுப்பதில்லை. மேலும் நகையின் மதிப்பிற்கு குறைந்த நகை கடன் வழங்கினால், குறைந்த நகை வைத்து இருக்கும் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் திரும்பப்பெறவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், 'தங்கத்தை பிணையாக பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில் குறுகியகால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. எனவே ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதே கோரிக்கையை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுமக்களும் விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது அமைச்சகம் மூலம் ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் எனவும், இந்த கட்டுப்பாடுகளையெல்லாம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தலாம் எனவும் ரிசர்வ வங்கிக்கு பரிந்துரை செய்தார். இதன் தொடர்ச்சியாக ரிசர்வ வங்கி திருத்தப்பட்ட நகை கடன் அறிவிப்பு-2025-ஐ, தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவீதமும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடனுக்கு 75 சதவீதமும் கடன் வழங்கப்படும். அதேபோல ஒருவர் அதிபட்சமாக 1 கிலோ தங்க நகைக்கும், 10 கிலோ வெள்ளி நகைக்கும் கடன் பெறலாம். மேலும் நகை உரிமைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப்படியே கடன் வாங்குபவர்கள் "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதும்.
இந்த புதிய அறிவிப்பில் மக்களை பாதித்த பல அம்சங்கள் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நீக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக நகை கடன் தேதி முடிந்த பின்னரும் எப்போதும் போல் புதுப்பித்து கொள்ளலாம். கூடுதல் கடனும் நிபந்தனை வரம்பின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இருப்பினும் வங்கிகள் அதிகபட்சமாக அடுத்தாண்டு (2026) ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்பு அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதுதான். இனி வரும் காலங்களில் இதுபோன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தலாம் அல்லது மாநில அரசுகளின் கருத்தை கேட்கலாம்.