தங்கத்தைவிட அதிகம் மின்னும் வெள்ளி!

தீபாவளி விற்பனையில் வெள்ளி பொருட்களுக்கு ‘கடும் கிராக்கி’ ஏற்பட்டு இருக்கிறது.;

Update:2025-10-17 06:21 IST

மதிப்புமிகு உலோகங்களான தங்கமும், வெள்ளியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விலை உயர்ந்துகொண்டே போகின்றன. இந்த ஆண்டு விலை உயர்வை கணக்கிட்டால், தங்கத்தைவிட வெள்ளியின் விலைதான் அதிகமாக உயர்ந்துகொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இப்போது வரை 53 சதவீதம் உயர்ந்திருந்தாலும், வெள்ளியின் விலையோ 73 சதவீதம் அதிகரித்து இருப்பது புள்ளிவிவரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 28.92 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், கடந்த 8-ந்தேதி ஒரு அவுன்ஸ் 49.57 அமெரிக்க டாலராக ஆகிவிட்டது. ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 31.10 கிராம் ஆகும். சர்வதேச சந்தையில் இந்த விலை என்றால், இங்கு வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.206-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கிலோ ரூ.85 ஆயிரத்து 100 ஆக இருந்த வெள்ளி விலை, இப்போது ரூ.2 லட்சத்து 6 ஆயிரமாக உள்ளது. பலர் வெள்ளியை நாணயமாகவோ, கட்டிகளாகவோ வாங்கி சேமிக்கிறார்கள். இந்த அளவுக்கு ஒரே ஆண்டில் இரு மடங்கையும் தாண்டி லாபம் கொடுத்த சேமிப்பு வேறுஎதுவும் இருக்க முடியாது. இந்த விலை உயர்வு இதோடு நிற்காது. இன்னும் உச்சத்துக்கு போகும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வெள்ளி விலை இப்படி உயருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் பிரதான காரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவது, தொழிற்சாலைகளில் பல்வேறு பொருட்களுக்கான உற்பத்தியில் வெள்ளியின் தேவை அதிகரித்துவருவது, அதாவது சோலார் பேட்டரி, செமி கண்டக்டர் தொழிற்சாலைகளில் ‘சிப்’ தயாரிப்பு உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பது ஆகும். இதனை ஈடுகட்ட சர்வதேச சந்தையிலும் வெள்ளியின் சப்ளை போதுமான அளவில் இல்லை. கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுதவிர, நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல், வர்த்தகப்போர், பொருளாதார மந்தநிலை ஆகியவையும் வெள்ளி விலை உயர்வுக்கு காரணங்களாக இருக்கின்றன.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சியை தடுக்க அங்குள்ள மத்திய பெடரல்வங்கி பல முறை வட்டியை உயர்த்தி பார்த்தும், டாலர் மதிப்பு உயரவில்லை. ஆனால் அமெரிக்க மக்களின் நுகர்வை அது பெருமளவில் குறைத்துவிட்டது. இதை சரிகட்ட சமீபத்தில் பெடரல் வங்கி, 0.25 சதவீதம் வட்டியையும் குறைத்தது. இதுமட்டுமல்லாமல், இப்போதுள்ள அமெரிக்க பொருளாதாரச் சூழலில் இன்னும் வட்டிக்குறைப்பு இருக்கும் என்ற நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் டாலரை வாங்குவதற்கு பதிலாக தங்கத்தை வாங்கி ஒருபக்கம் குவித்துவரும் நிலையில், மறுபுறம் முதலீட்டாளர்களின் பார்வையெல்லாம், வெள்ளியின் பக்கம் பாய்ந்துவிட்டது. வெள்ளியில் முதலீடுகள் செய்தால், அதிகவருவாயை ஈட்டித்தரும் என்ற பார்வையில், எல்லோருமே வெள்ளியில் முதலீடுசெய்ய தொடங்கியதால் அதன் தேவையும் பெருமளவில் அதிகரித்துவிட்டதை யாரும் மறுக்கமுடியாது. தீபாவளியையொட்டி பரிசுகொடுப்பவர்கள் எல்லாம் வெள்ளிப்பொருட்களை கொடுத்தால்தான் மதிப்பு என்ற வகையில், வெள்ளிப்பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இன்னும் சற்று காலத்துக்கு வெள்ளி விலை உச்சத்தைதான் காணும் என்பதால், தீபாவளி விற்பனையில் வெள்ளி பொருட்களுக்கு ‘கடும் கிராக்கி’ ஏற்பட்டு இருக்கிறது. வெள்ளி கட்டிகளை முன்பதிவு செய்து 15 நாட்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு வெள்ளிக்கு தற்போது கிராக்கி உள்ளது. மொத்தத்தில் தேவையில் தங்கத்தை காட்டிலும் வெள்ளியே அதிகம் மின்னுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்