வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-11-21 13:13 IST

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (சனிக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது வரும் 24ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்