வங்கக்கடலில் புயல் சின்னம்.. 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த மாதம் 30-ந்தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 1-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நேற்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
எனவே சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று துறைமுக அதிகாரிகள் கூறினர்.