நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும் மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்"
வங்கக்கடலில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.;
சென்னை,
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மேற்கு வங்காளம்-வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சாகர் தீவுகள்-கேப்புபுராவிற்கு இடையே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என தெரியவந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (29-05-2025): நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழையும் ( ரெட் அலர்ட்), திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (30-05-2025): நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (29-05-2025) காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.
இது சாகர் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகாவிற்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், கேபுபாராவிற்கு (வங்கதேசம்) மேற்கே சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, மேற்கு வங்காளம் வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும்-கேபுபாராவிற்கும் (வங்கதேசம்) இடையே இன்று பிற்பகல் கரையை கடக்க கூடும்
29-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
30-05-2025: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
31-05-2025 முதல் 04-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (29-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (30-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.