ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.;
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (ஜூன் 11ம் தேதி) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூன் 12ம் தேதி) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 13 ம் தேதி) கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 14ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிகனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி, மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.