குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும்போது தகராறு: 3 பெண்கள் சுட்டுக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட தகராறில் 3 பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-05-12 20:09 IST

கோப்புப்படம் 

ராசல் கைமா,

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் 3 பெண்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு சேர்த்தனர். ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் 3 பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதைத்தொடர்ந்து, போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பெண்களை சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபர் குறுகிய பாதை வழியாக வாகனத்தில் செல்லும்போது அவருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வாலிபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பெண்களை நோக்கி சரமாரியாக சுட்டது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்