காசாவில் முழுமையான போர் நிறுத்தம் வேண்டும் - இந்தியா வலியுறுத்தல்

காசா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நிவர்த்தி செய்ய இடைக்கால போர் நிறுத்தங்கள் போதுமானதில்லை என்று ஐநாவில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.;

Update:2025-07-25 18:56 IST

வாஷிங்டன்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை காசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் பட்டினியால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இதனால், போரை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரக்கோரி சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் காசா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கடந்த ஜனவரி 19ம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தொடர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

காசாவில் உணவு உள்ளிட்ட நிவாரண பொருள்களை வாங்க காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஈவு, இரக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில்,ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் பர்வதேனி ஹரிஷ் பேசியதாவது:-

காசாவில் நீடித்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது, கல்வி பாதிப்பு போன்ற கடுமையான பிரச்னைகளால் காசா மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். போர் நிறுத்தத்தை நோக்கி முன்னோக்கி செல்லும் வழிகள் தௌிவாக உள்ளது. காசாவில் மேலும் துயரங்கள் தொடர அனுமதிக்க கூடாது.

காசா மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை நிவர்த்தி செய்ய இடைக்கால போர் நிறுத்தங்கள் போதுமானதில்லை. காசாவில் முழுமையான போர் நிறுத்தம் வேண்டும். பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அவர், "பிரச்சினைகளுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைகள் மூலம் தீா்வு காண்பதே சாத்தியமான வழியாக இருக்கும்

என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்