இங்கிலாந்தில் 10 பெண்கள் பலாத்காரம் - சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
போலீசார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.;
Image Courtesy : @metpoliceuk
லண்டன்,
சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜூ (வயது 28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார். இதற்கிடையே ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களிடம் அவர் பழகி வந்துள்ளார். அவர்களில் சிலரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் போலீசார் ஜென்ஹாவோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில், இதேபோல் அவர் 10 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜென்ஹாவோவை குற்றவாளி என கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இருப்பினும் இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டு, இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தனர். போலீசார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில், 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவர் குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு, அவர் மீது புகார் தெரிவித்த 24 பெண்களின் வாக்குமூலங்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.