சிரியாவில் தேவாலயத்தில் தாக்குதல்: 22 பேர் பலி, 63 பேர் காயம்
டமாஸ்கசில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
டமாஸ்கஸ்,
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் குழுவைச் சேர்ந்த ஒருவர், தனிநபராக அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அத்துடன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எகிப்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நேரத்தில் சிரியாவுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளன. பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சில உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.