ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
மியான்மரில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
மியான்மர்:
மியான்மர் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி 83 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து, 2021 பிப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது.
தொடர்ந்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மின்ட் உள்ளிட்ட தலைவர்களையும் ராணுவம் கைது செய்து சிறையில் வைத்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்கள், பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மியான்மரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மியான்மர் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மியான்மர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் டிசம்பர் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறத் தொடங்கும் என்றும், பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள 330 நகரங்கள் தொகுதிகளாக வரையறுக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 கட்சிகள் களமிறங்க உள்ளன. இதில், ராணுவம் ஆதரவு பெறும் யூனியன் ஒற்றுமை மேம்பாட்டு கட்சியும் அடங்கும். ராணுவ ஆட்சி அமலில் இருப்பதால், தேர்தல் எந்த முறையில் நடைபெறும் என்பது தெளிவாக தெரியவில்லை.