இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;
சுமத்ரா,
பூமியில் நாளுக்கு நாள் மாறிவரும் கால நிலை மாற்றம் காரணமாக உலகத்தின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் நாட்டின் குவேட்டா நகரில் அதிகாலை 1.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. இதே போல ஆப்கானிஸ்தானில் நேற்று காலை 10.38 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் வீட்டிற்குள் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதே போல கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் தமிழகத்தில் சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது.
எனவே தற்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள. இதனிடையே கடந்த வாரமும் இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.