அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு
காசாவில் அமைதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக எகிப்தில் இன்று உச்சி மாநாடு நடக்கிறது.;
வாஷிங்டன்,
காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியின்பேரில் எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தப்படி இரு தரப்பும் இன்று (திங்கட்கிழமை) பணயக்கைதிகளை விடுவிக்கின்றனர். ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேலை சேர்ந்த 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது. அவர்கள் இன்று விடுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் இஸ்ரேல் பிடியில் உள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீன கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
அத்துடன் போரினால் நிலைகுலைந்துள்ள காசாவுக்கு நிவாரண உதவிகள் சென்றடைவதற்காக 5 எல்லைகளை இஸ்ரேல் திறக்கும். போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சுமார் 200 அமெரிக்க வீரர்கள் காசாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகத்தின் வீரர்களும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
காசாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போடப்படுகிறது. எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் அமைதி உச்சி மாநாடு நடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மற்றும் 20-க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் எகிப்து அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். இதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் இந்தியா சார்பில் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டிரம்ப் நேற்று புறப்பட்டார்.
இதற்கிடையே காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுமா? என்பது பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகளை ஹமாஸ் தரப்பு ஏற்க மறுத்து இருக்கிறது. குறிப்பாக ஆயுதங்களை துறப்பது, காசாவில் இருந்து வெளியேறுவது போன்ற நிபந்தனைகள் அபத்தமானது என ஹமாஸ் அறிவித்து உள்ளது.
அத்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிகழ்வையும் ஹமாஸ் தரப்பு புறக்கணித்து உள்ளது. எனவே காசாவில் நிரந்தர அமைதிக்கு சிக்கல் நீடிப்பதாகவே சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.