அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்ற சோதனை: 5 வயது சிறுவன் தடுப்பு முகாமில் அடைப்பு - கமலா ஹாரிஸ் கண்டனம்

ஈக்வடார் நாட்டை சேர்ந்த அட்ரியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு வந்தார்.;

Update:2026-01-23 21:21 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குடியேற்ற சோதனை நடவடிக்கையில் 5 வயது சிறுவன் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மினசோட்டாவில் அட்ரியன் அரியாஸ் என்பவர் தனது 5 வயது மகன் லியாம் ராமோசை மழலையர் பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது அவர்களை அரியாஸ் குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஈக்வடார் நாட்டை சேர்ந்த அட்ரியன் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு வந்தார். அவர்கள் சட்டப்பூர்வமாக புகலிடம் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அட்ரியன் அரியாசை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது 5 வயது மகனையும் அழைத்து சென்று டெக்சாசில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்தனர்.முன்னதாக சிறுவனை அவனது வீட்டுக்கு அழைத்து சென்று வீட்டுக்குள் வேறு 5 யாராவது இருக்கிறார்களா என்று சோதிக்க அவனை கதவை தட்டும்படி அதிகாரிகள் கூறி உள்ளனர். வீட்டிற்குள் இருந்த சிறுவனின் தாய் கதவை திறந்து வெளியே வந்தார். அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அப்போது சிறுவன் பயத்துடன் காணப்பட்டான். இதன்மூலம் சிறுவனை ஒரு இரை போல அதிகாரிகள் பயன்படுத்தியதாக பலர் விமர்சித்து உள்ளனர்.பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், லியாமை பார்த்துக் கொள்ளப் பள்ளி அதிகாரிகள், அண்டை வீட்டினர் என அனைவரும் முன்வந்தனர். ஆனால் அவர்களிடம் லியாமை ஒப்படைக்கக் குடியேற்ற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இச்சம்பவத்துக்கு முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடும் கண்ட னம் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, லியாம் ராமோஸ் ஒரு குழந்தை. அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்க வேண்டும். நான் கோபமாக இருக்கிறேன். நீங்களும் கோபமாக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே உள் நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது,

சிறுவனை அதிகாரிகள் குறிவைக்க வில்லை. அவனை விட்டுவிட்டு தந்தை தப்பி ஓடினார். இதனால் சிறுவனை அதிகாரிகள் வைத்திருந்தனர். தனது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று தந்தையே கேட்டார். இதனால் சிறுவன் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டான் என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்