7 போர்களை நிறுத்தினேன்; டொனால்டு டிரம்ப்
போர்களை நிறுத்த ஐ.நா. சபை முயற்சிக்கவில்லை என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்;
வாஷிங்டன்,
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார். பொதுசபை கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது,
அமெரிக்காவின் பொற்காலம் இது. அமெரிக்க பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளது. முதலீடுகள் அதிகரித்துள்ளன. பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.
முடிவுக்கே வராத போர்கள் என பலரும் கூடிய 7 போர்களை நான் நிறுத்தியுள்ளேன். கம்போடியா - தாய்லாந்து, கொசோவா - செர்பியா, இந்தியா - பாகிஸ்தான், இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, அர்மீனியா - அசர்பைஜான், காங்கோ - ருவாண்டா நாடுகள் என 7 போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்த போர்களை நிறுத்த எங்களுக்கு உதவ ஐ.நா. சபை முயற்சிக்கவில்லை.
உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது.
சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய பிரச்சினையை சந்திக்கிறது. சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பேச்சு சுதந்திரம், மத சுதந்திரத்தை உலக நாடுகளின் தலைவர்கள் பாதுகாக்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள், அகதிகளால் சுதந்திர உலகின் பெரும் பகுதி அழிகிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும். அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்.
உக்ரைன், ரஷியா இடையேயான போரில் ரஷியாவுக்கு முக்கிய நிதி உதவியாளர்களாக சீனாவும், இந்தியாவும் உள்ளன. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி போருக்கு நிதி அளிக்கின்றன. சீனா, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. இந்த 2 நாடுகள் மீதும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து கூடுதல் வரி விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.