ஒரேநேரத்தில் அரசு, தனியார் அலுவலகங்களில் வேலை; அமெரிக்காவில் இந்தியர் கைது
நியூயார்க்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாதம் பகுதியில் வசித்து வருபவர் மெஹல் கோஸ்வாமி (வயது 39). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் நியூயார்க்கில் உள்ள அரசு நிறுவனமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அரசு ஊழியரான இவர் வீட்டில் இருந்து ஒர்க் பிரம் ஹோம் முறையில் பணியாற்றி வந்தார்.
அரசு ஊழியரான கோஸ்வாமி தனியார் நிறுவனத்திலும் பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஐரோப்பிய நாடான மால்வாவில் உள்ள செமிகண்டக்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிக்கு சேர்ந்துள்ளார். அந்நிறுவனத்திலும் வீட்டில் இருந்து ஒர்க் பிரம் ஹோம் முறையில் பணியாற்றி வந்தார். இரு நிறுவனங்களையும் சேர்த்து கோஸ்வாமி இந்திய மதிப்பில் சுமார் ரூ. 40 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில், கோஸ்வாமி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவது குறித்து மர்ம நபர் நியூயார்க்கில் உள்ள அரசு அலுவலகத்திற்கு மெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கோஸ்வாமி ஒரேநேரத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்வது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கோஸ்வாமியை சிறையில் அடைத்தனர். மேலும், கோஸ்வாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகும்பட்சத்தில் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.