ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு

பாதுகாப்பு சூழலை கவனத்தில் கொண்டு ஈரானை விட்டு வெளியேறுங்கள் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.;

Update:2026-01-17 06:51 IST

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28-ந்தேதி தொடங்கிய போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு பரவியது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்தது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சூறையாடுபவர்கள், கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள் என அரசு கூறியது. இதனால், அந்நாட்டு தண்டனை சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.

இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஈரானில் 800 பேரை நேற்று தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது.

அதனை அவர்கள் ரத்து செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன் என கூறினார். கடந்த 2 தினங்களுக்கு முன் டிரம்ப் கூறும்போது, போராட்டக்காரர்களை படுகொலை செய்வது நிறுத்தப்பட்டு விட்டது என தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.  பாதுகாப்பு சூழலை கவனத்தில் கொண்டு ஈரானை விட்டு வெளியேறுங்கள் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்