தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது.;
வாஷிங்டன்,
வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ (வயது 58) இரும்பு பெண்மணி என அறியப்படுகிறார். அவர் அங்கு ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்.
இதனிடையே கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த அவர், தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு அவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “டிரம்ப்-ன் வசம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்கினேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காக அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம்” என்று கூறினார்.
இந்த சூழலில் டிரம்ப், நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், “மரியா கொரினா மச்சாடோ அற்புதமானவர். பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவர் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை நான் மேற்கொண்ட பணிக்காக எனக்கு வழங்கினார். இது ஒரு பரஸ்பர மரியாதையின் மீதான அற்புத செயலாகும். மரியாவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே நோபல் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், “நோபல் பரிசை ஒருவர் ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்குத் தரவோ முடியாது. ஒருமுறை அறிவிக்கப்பட்டால் அதுவே நிரந்தரமானது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.